நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த ஓட்டல் அதிபரை கடத்தி கொல்ல முயற்சி

நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த ஓட்டல் அதிபரை கடத்தி கொல்ல முயன்ற வழக்கில் வாலிபர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி அருகே காதல் திருமணம் செய்த ஓட்டல் அதிபரை கடத்தி கொல்ல முயற்சி
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலக்கரைபட்டியை சேர்ந்தவர் வேணு பிரபாகரன் (வயது 25). இவர் திருவனந்தபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தெய்வநாயகபேரியை சேர்ந்த சேதுலெட்சுமி (23) என்பவரை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தனர்.

தனது அக்காளை காதலித்து திருமணம் செய்த வேணுபிரபாகரன் மீது சேதுலெட்சுமியின் தம்பி வெள்ளப்பாண்டி ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில் சேதுலெட்சுமிக்கு போன் செய்த வெள்ளப்பாண்டி பாட்டிக்கு உடல் நிலை சரியில்லை. உடனே நீ ஊருக்கு வா என கூறினார். இதையடுத்து சேதுலெட்சுமி தனது கணவருடன் மூலக்கரைப்பட்டிக்கு வந்தார்.

அப்போது வெள்ளப்பாண்டி தனது நண்பர்கள் சுரேஷ், குமார், செல்வகுமார், குப்புசாமி ஆகியோருடன் சேர்ந்து வேணுபிரபாகரனிடம் நைசாக பேசி நாம் கடைக்கு செல்வோம் என கூறினார்.

பின்னர் சிறிது நேரத்தில் 5 பேரும் வேணு பிரபாகரனை காரில் கடத்தி சென்று அவரது வாயில் வி‌ஷம் ஊற்றினர். பரப்பாடி சிவந்திபட்டி அருகே கார் சென்ற போது திடீரென கார் பழுதானது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த 5 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வேணுபிரபாகரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிப்பட்ட 5 பேரிடமும் நாங்குநேரி மகளிர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com