நாங்குநேரியில் கணவன்-மனைவி சரமாரி வெட்டிக்கொலை- தொழிலாளி வெறிச்செயல்

நிலப்பிரச்சினையில் கணவன் மற்றும் மனைவியை சரமாரி வெட்டிக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாங்குநேரியில் கணவன்-மனைவி சரமாரி வெட்டிக்கொலை- தொழிலாளி வெறிச்செயல்
Published on

களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைக்குளம் அடுத்துள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 60). விவசாயி. இவரது மனைவி பேச்சித்தாய் (55). இவர்களுக்கு மாயாண்டி (23) என்ற மகனும், சென்ட் (27) என்ற மகளும் உள்ளனர். மாயாண்டி மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சென்ட் திருமணமாகி சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். நேற்று விடுமுறையில் மாயாண்டி வீட்டுக்கு வந்தார். அதே போன்று சென்ட் குழந்தை பெறுவதற்காக தாய் வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

செல்லையாவுக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளியான ஆறுமுக நயினார் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பாக நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மாயாண்டி வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த ஆறுமுகநயினார், அவதூறாக பேசி செல்லையாவுடன் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிவே ஆத்திரமடைந்த ஆறுமுகநயினார் அரிவாளால் செல்லையாவை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க சென்ற பேச்சித்தாய்க்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து செல்லையா மகள் சென்ட் ஓடிச் சென்று ஆறுமுகநயினாரை தடுக்க முயன்றார். அவரையும் ஆறுமுகநயினார் சரமாரி வெட்டினார்.

பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். அரிவாளால் வெட்டப்பட்ட செல்லையா, பேச்சித்தாய், சென்ட் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தனர். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லைஅரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறிது நேரத்தில் செல்லையாவும், பேச்சித்தாயும் பரிதாபமாக இறந்தனர். பலத்த காயமடைந்த சென்ட் டுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆறுமுகநயினாரை வலைவீசி தேடிவருகின்றனர். அவர் இரவோடு இரவாக வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com