நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவிக்கு நிதி உதவி- எடப்பாடி பழனிசாமி

நாசா விண்வெளி மையத்துக்கு செல்லும் நாமக்கல் மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்கள் இணைந்து, இந்தியா முழுவதும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ-மாணவியருக்கு இணையம் வாயிலாக நடத்திய அறிவியல் தேர்வில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, 9-ம் வகுப்பு படித்து வரும் அபிநயா என்ற பள்ளி மாணவி பங்கேற்று, தேர்வில் வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார் என்ற செய்தியை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், எனது தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி அபிநயா அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது அவரது திறமைக்கு கிடைத்த வெற்றியாகும்.

விண்வெளித்துறையில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி அபிநயா கல்வியில் சிறந்து விளங்கவும், விண்வெளித்துறையில் இதுபோன்று பற்பல சாதனைகள் படைத்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமெனவும் இத்தருணத்தில் நான் மனதார வாழ்த்துகிறேன்.

நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்வதையொட்டி, அபிநயாவின் சாதனையினை பாராட்டியும், வருங்கால இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் விதமாகவும், அபிநயாவிற்கு 2 லட்சம் ரூபாய் நிதியினை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com