

நல்லம்பள்ளி:
ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பா கற்கள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு புறப்பட்டது. இந்த லாரியை ஆந்திர மாநிலம் அனந்த்பூரை சேர்ந்த டிரைவர் பரமஆஞ்சநேயன் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் கிளீனராக வந்த பாலச்சந்திரா (30) என்பவர் வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் முதல் வளைவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் பரமஆஞ்சநேயன், கிளீனர் பாலச்சந்திர ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். லாரி கவிழ்ந்து கடப்பா கற்கள் சிதறி விழுந்ததால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்தனர்.
அவர்கள் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதையடுத்து போலீசார் சாலையில் கவிழ்ந்த லாரி மற்றும் கடப்பா கற்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.