

நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் மட்டும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நாகர்கோவிலில் நேற்று காலை முதலே வானில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்தது.
இதனால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு, ஆராட்டு ரோடு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வடசேரி, கிருஷ்ணன் கோவில், புத்தேரி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சாலைகளில் ஐஸ் கட்டிகள் கிடந்தன. ஆலங்கட்டி மழையை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.
நாகர்கோவிலில் அதிகபட்சமாக 52.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. நாகர்கோவில் வட்டவிளை காமராஜர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி அய்யப்பன் என்பவர் வீட்டில் இடி தாக்கியதில் வீட்டின் மேல் கூரை சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த அவரது மகளும், பக்கத்து வீட்டைச்சேர்ந்த கல்லூரி மாணவிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இரணியல், ஆனைக் கிடங்கு, குளச்சல், தக்கலை, அழகியமண்டபம், குலசேகரம், திருவட்டார் பகுதிகளிலும் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
நேற்று பெய்த மழை கோடையை குளிரவைக்கும் வகையில் இருந்தது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 30.65 அடியாக இருந்தது. அணைக்கு 150 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 30.60 அடியாக உள்ளது. அணைக்கு 56 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-6, பெருஞ்சாணி-11, சிற்றாறு 1-18.2, சிற்றாறு 2-12, இரணியல்-7.2, நாகர்கோவில்-52.4, சுருளோடு-8, பாலமோர்-5.2, ஆனைக்கிடங்கு-21.2, குளச்சல்-3.6, குருந்தன் கோடு-4.2, அடையாமடை-19, கோழிப் போர்விளை-8, முள்ளங்கினாவிளை-23, புத்தன் அணை-10.6.