பட்டாபிராம் அருகே கூவம் ஆற்றில் 150 ஆண்டு பழமையான நாகாத்தம்மன் சிலை கண்டெடுப்பு
திருநின்றவூர்:
சென்னை பட்டாபிராம் அணைகட்டுச்சேரி கூவம் ஆற்றில் நேற்று பகல் 11 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது காலில் ஏதோ ஒரு பொருள் இடித்தது போல உணர்ந்தனர். உடனே அந்த இடத்தில் தோண்டிப்பார்த்தனர்.
அப்போது அங்கு நாகாத்தம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது பற்றி சிறுவர்கள் கிராம மக்களுக்கு தெரிவித்தனர். அவர்கள் கிராம நிர்வாக அதிகாரி பிரகாஷ் பாலாஜிக்கு தகவல் கொடுத்தனர். அவரும், வருவாய் ஆய்வாளர் இசக்கி முத்துவும் சேர்ந்து சிலையை மீட்டு பட்டாபிராம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியிடம் ஒப்படைத்தனர்.
அவர் அந்த சிலையை பூந்தமல்லி தாசில்தார் லட்சுமணனிடம் ஒப்படைத்தார்.
அந்த சிலை 150 ஆண்டு பழமையானதாக இருக்கும் என்று தெரிகிறது. அந்த சிலை தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாகாத்தம்மன் சிலை ஆற்றில் அடித்து வரப்பட்டிருக்கலாமா அல்லது 150 ஆண்டுகளாக அங்கேயே இருந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

