வசதி படைத்தவர்கள் ஏழைகளுக்கு உதவ வேண்டும்: நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா

இந்தியாவில் உள்ள வசதி படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என்று நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா கூறினார்.
நிகழ்ச்சியில் நடிகை ரோஜா பேசிய காட்சி.
நிகழ்ச்சியில் நடிகை ரோஜா பேசிய காட்சி.
Published on

திருமலை:

ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ வங்கியில் மேலாளராக பணியாற்றி வரும் ரியோசிங்கே என்பவர், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும், பள்ளிகளுக்கும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

அதேபோல், சித்தூர் மாவட்டம் நகரியை அடுத்த சிந்தலப்பாடி கிராமத்தில் ஜில்லா பரி‌ஷத் உயர் நிலைப்பள்ளிக்கு நவீன சுகாதார வளாகம் (பயோ டாய்லெட்) ஒன்றை தனது செலவிலேயே கட்டிக் கொடுத்துள்ளார்.

அந்தச் சுகாதார வளாகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அதில், ரியோசிங்கே கலந்து கொண்டு சுகாதார வளாகத்தை திறந்து வைத்து பேசினார். அதைத்தொடர்ந்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுகாதார வளாகங்களை கட்டிக்கொடுத்து வருகின்றனர். அதேபோல் ஜப்பான் நாட்டை சேர்ந்த ரியோசிங்கே நவீன சுகாதார வளாகம் ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார்.

அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்கள் நன்றாக படித்து பிற்காலத்தில் மற்றவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள வசதி படைத்தவர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்ய முன்வர வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும், என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com