

மதுரை:
மதுரை பொன்மேனி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34) தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்தார்.
நேற்றிரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது திண்டுக்கல்-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் ஒரு கார் பின் தொடர்ந்து வந்தது.
துவரிமான் கண்மாய் அருகே வந்தபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம கும்பல், செந்தில்குமாரின் கழுத்தை அறுத்து கொன்று சாலையில் வீசி விட்டு தப்பி சென்றது.
இது தொடர்பாக செந்தில்குமாரின் தாய் ரோசம்மாள் புகாரின் பேரில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
செந்தில்குமாருக்கும், சிலருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதன் காரணமாக 3 பேர் அடங்கிய கும்பல் செந்தில்குமாரை தீர்த்து கட்டியதா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.