

செக்கானூரணி:
விருதுநகர் மாவட்டம், தூங்காரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பவுல் மாணிக்கம். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 60). இவர்கள் இருவரும் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே ராஜம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர்.
சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி இருவரும் வெளியே சென்றனர். அப்போது ராஜம்பாடி தேனி மெயின் ரோட்டை பொன்னம்மாள் கடக்க முயன்றார்.
மதுரையில் இருந்து போடி நோக்கிச் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னம்மாள் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.