நாகை மாவட்ட மீனவர்கள் 8வது நாளாக கடலுக்கு செல்லவில்லை - மீன்கள் விலை உயர்வு

நாகை மாவட்ட மீனவர்கள் இன்று 8-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக நாகையில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாகை மாவட்ட மீனவர்கள் 8வது நாளாக கடலுக்கு செல்லவில்லை - மீன்கள் விலை உயர்வு
Published on

நாகப்பட்டினம்:

மீன் பிடி தடை காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கிய நிலையில் நாகை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பைபர் படகு மீனவர்கள் கரையோரங்களில் மீன்பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பானி புயல் எச்சரிக்கை காரணமாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாவட்ட மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 8-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக நாகையில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

புயல் காரணமாக பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தஞ்சை, கும்பகோணம் பகுதியில் உள்ள ஆறு, ஏரி குளங்கள் மற்றும் பண்ணைகளிலிருந்து பிடித்து வரப்படும் மீன்கள் நாகை அண்ணா சிலை அருகே உள்ள பாரதி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

கெண்டை, வளர்ப்பு இறால், உள்ளிட்ட மீன்கள் கும்பகோணத்தில் இருந்தும், கிழங்கா, உள்ளிட்ட மீன் வகைகள் கேரளாவில் இருந்தும் விற்பனைக்கு வருவதால், மீன் விலையும் அதிகரித்துள்ளது.

130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கெண்டைமீன் தற்போது 180 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட விரால் மீன் 650ரூபாய்க்கும், 180 ரூபாய்க்கு விற்ற இறால் 250-க்கும் விற்பனையாகிறது. இந்த மீன்களும் விரைவாக விற்று விடுவதால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விதவிதமான மீன்களை வாங்கிச் செல்லும் நாகை மீன் பிரியர்கள் தற்போது அதிக விலையில் குறைவான வகை மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் ஏமாற்றத்தில் உள்ளனர். மீன்களின் விலை உயர்வு காரணமாக எப்பொழுதும் கூட்ட நெரிசலாக இருக்கும் நாகை பாரதி மார்க்கெட் மக்கள் கூட்டமின்றி பொலிவிழந்து காணப்படுகிறது.

வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறு காட்டுத் துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் இன்று 8-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்காண பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரமும் ஆற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறைந்த தூரம் சென்று மீன்பிடித்து வந்த பைபர் படகுகளும் புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் தங்கள் வீடுகளில் வலைகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com