

வாஷிங்டன்:
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
நேற்று (2-ம் தேதி) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாம் சுற்று போட்டியில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ரபேல் நடால் அர்ஜெண்டினாவின் லியோனர்டோ மேயரை எதிர்கொண்டார். இப்போட்டியில், நடால் 6-7, 6-3, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
மற்றொரு போட்டியில் ஆறாம் நிலை வீரரான டோம்னிக் தெயிம், பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோவை 7-5, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நான்காம் சுற்றுக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு மூன்றாம் சுற்று போட்டியில் ஒன்பதாம் நிலை வீரரான கோஃபின், கெயில் மோன்பில்ஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மூன்றாம் சுற்று போட்டியில் முதல்நிலை வீராங்கனையான பில்ஸ்கோவா, சீனாவின் ஸாங் ஷுஐவை எதிர்கொண்டார். இப்போட்டியில், 3-6, 7-5, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.
இந்த பிரிவின் மற்றொரு போட்டியில் விளையாடிய நான்காம் நிலை வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ரோஜர்ஸை 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷுஐ ஜோடி ஸ்லோவேகியாவின் ரைபரிகோவா - செபிலொவா ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில், சானியா ஜோடி 6-7, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியா ஜோடியை விழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபன்னா - கனடாவின் தப்ரோஸ்கி ஜோடி, இரண்டாம் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் வாட்சன் - பின்லாந்தின் ஹென்றி கொண்டினென் ஜோடியை 6-4, 4-6, 13-11 என்ற செட் கணக்கில் தோற்கடித்து மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியது.