திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி இறப்பில் மர்மம் நீடிப்பு

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி மரணம்.
மாணவி மரணம்.
Published on

கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி காமலாபுரம் பிரிவு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் ஜோசப் (வயது 50). இவரது மகள் வின்சியா (வயது 20). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் வின்சியா தோட்டத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து வின்சியாவை அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடினர். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் வின்சியா பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மைய நாயக்கனூர் போலீசாரும், நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி வின்சியாவின் உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 5 அடி வரை தண்ணீர் உள்ளது. கிணற்றில் தடுப்பு சுவர் இல்லை. எனவே கிணற்றில் வின்சியா தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது மர்மமாக உள்ளது. இதுபற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com