போதையில் ரகளையில் ஈடுபட்ட அரசு பஸ் டிரைவர் மீது மர்ம கும்பல் தாக்குதல் பல்லடம் பஸ் நிலையத்தில் பரபரப்பு கோவை-04
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பஸ் நிலையத்தில் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இதனை பார்த்து ஆவேசம் அடைந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் தொடர்ந்து ரகளை செய்தார். தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
ஆனால் போதையில் நினைவை இழந்த அவர் மீண்டும், மீண்டும் அங்கிருந்தவர்கள் மட்டுமின்றி போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக போலீசார் வலுகட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
ரகளையில் ஈடுபட்டவர் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் பல்லடம் குங்குமம் பாளையத்தை சேர்ந்த வடிவேல் (36) என்பதும், பொள்ளாச்சி- பண்ணாரி செல்லும் அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
தற்போது போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வேலைக்கு செல்லாத வடிவேல் பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க மனைவியுடன் பல்லடம் வந்துள்ளார். மனைவியை ஜவுளிக் கடைக்கு அனுப்பி விட்டு மது அருந்தி போதையில் ரகளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை தாக்கிய கும்பல் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பல்லடம் பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

