சிங்கையில் மர்ம காய்ச்சலுக்கு ராணுவ வீரர் மகள் பலி

நெல்லை மாவட்டம் சிங்கையில் மர்ம காய்ச்சலுக்கு ராணுவ வீரர் மகள் உயிரிழந்தாள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கையில் மர்ம காய்ச்சலுக்கு ராணுவ வீரர் மகள் பலி
Published on

சிங்கை:

நெல்லை மாவட்டம் சிங்கை ஜார்ஜ் புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன், ராணுவ வீரர். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு கனகவேல் (வயது10) என்ற மகனும், தரணி (7) என்ற மகளும் இருந்தனர். தரணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். பின்னர் உடல்நலம் தேறியதையடுத்து சிறுமி வீடு திரும்பினாள். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் தரணிக்கு உடல்நிலை குறை ஏற்பட்டு பரிதாபமாக இறந்தாள்.

இதே போல் தரணியின் அண்ணன் கனகவேலுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணன் -தங்கைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதா? என டாக்டர்கள் ரத்த மாதிரிகளை கொண்டு பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

சிறுவர்-சிறுமிகளை தாக்கி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com