

பனமரத்துப்பட்டி:
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி மணி (வயது 58). இவர் தனது மனைவி அம்சவேணி (வயது 50), மகள் சத்யா (வயது 30), பேத்தி சவுரதி (வயது 10) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது தோட்டத்துக்கு செல்லும் வழியில் சாலையோரம் கிடந்த ரேடியோ வடிவிலான மர்ம பொருள் ஒன்றை மணி வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மணி அந்த மர்ம பொருளை சோதித்துப் பார்ப்பதற்காக அதில் இருந்த வயரை மின் இணைப்பில் சொருகி உள்ளார். அப்போது அந்த பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்து உள்ளது. இதில் மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அருகில் இருந்த மணியின் நண்பர் நடேசன், அண்ணன் மகன் வசந்தகுமார், சிறுமி சவுரதி ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு உமா சங்கர் பனமரத்துப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவல்லி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
விவசாயி மணி எடுத்து வந்த மர்ம பொருளில் ஏதேனும் வெடிபொருட்கள் இருந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்ய அங்கு இருந்த தடயங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரது தோட்டம் மலைப்பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகள் வராமல் தடுப்பதற்காகவும், முயல், காட்டுப்பன்றி போன்றவற்றை வேட்டையாடுவதற்காகவும் அவர் வீட்டில் ஏதேனும் வெடிமருந்து வைத்திருந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ள பொருட்களில் இருந்து கிடைக்கும் தகவலை பொறுத்தே எவ்வாறு வெடி விபத்து நடந்தது? என்ன பொருள் வெடித்தது? என்பது குறித்து தெளிவாக தெரியவரும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.