ஆந்திர வனப்பகுதிக்கு செம்மரம் வெட்ட சென்ற அரூர் வாலிபர் மர்ம மரணம்

செம்மரம் வெட்டும் வேலைக்கு சென்ற அரூர் தொழிலாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்மரம் வெட்ட சென்ற அரூர் வாலிபர் மர்ம மரணம்
செம்மரம் வெட்ட சென்ற அரூர் வாலிபர் மர்ம மரணம்
Published on

அரூர்:

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் கோட்டப்பட்டி, சிட்லிங் உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் சித்தேரி மலை ஊராட்சியில் 62 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக பணம் வழங்குவதாக கூறி, புரோக்கர்கள் செம்மரம் வெட்ட ஆந்திரா மாநில வனப்பகுதிக்கு அழைத்து செல்கின்றனர்.

பணத்துக்கு ஆசைப்பட்டு செல்லும் கூலித் தொழிலாளர்கள் ஆந்திர வனத்துறை மற்றும் போலீசாரிடம் சிக்கி கைதாகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

கடந்த, 2015-ம் ஆண்டில் செம்மரங்களை வெட்டி கடத்திய தமிழகத்தை சேர்ந்த, 20 பேரை ஆந்திர போலீசார் சுட்டுக்கொன்றனர். இதில், சித்தேரியை சேர்ந்தவர்கள் 7 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது செம்மரம் வெட்டுவதற்காக சென்ற சித்தேரி வாலிபர் மர்மமான முறையில் இறந்ததும், அவரது உடலை ஒரு கும்பல் வீசி விட்டு சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரி மெதிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமன்(வயது 38). இவருக்கு உண்ணாமுலை என்ற மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம், ராமன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (30), தீர்த்தமலை, சுப்பிரமணி உள்பட 5 பேர் செம்மரம் வெட்டி கடத்துவதற்காக ஆந்திர மாநிலம் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது ராமன், மர்மமான முறையில் இறந்துள்ளார்.

இதற்கிடையே ராமனுடன் சென்ற முருகன் உள்பட 4 பேரும், ஆந்திர வனத்துறையினரிடம் சிக்கி கைதாகி உள்ளனர்.

இந்த நிலையில் இறந்த ராமன் உடலை எடுத்து வந்து சித்தேரி பஸ் நிறுத்தம் பகுதியில் சொகுசு காரில் வந்த ஒருவர் வீசி விட்டு தப்பி சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் இன்று அரூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்,

இதுகுறித்த தகவலறிந்த அரூர் போலீசார் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரூர் அருகே உள்ள நாதியனூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சொகுசு காரில் ராமன், உடலை கொண்டு வந்து சாலையில் வீசி விட்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். இவர் எதற்காக ராமன் உடலை காரில் கொண்டு வந்து வீசி விட்டு சென்றார் என்பது மர்மமாக உள்ளது.இதுகுறித்து அரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராமனை அழைத்து சென்ற 4 பேரும் ஆந்திர வனத்துறையினரின் காவலில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான் உண்மை தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

செம்மரம் வெட்டும் வேலைக்கு சென்ற அரூர் தொழிலாளி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com