மயிலாப்பூர்-மாங்காட்டில் 2 பேர் வெட்டிக்கொலை

மயிலாப்பூர்-மாங்காட்டில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை
கொலை
Published on

சென்னை:

மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். சமையல் தொழிலாளி.

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பரான லோகேசும், நேற்று இரவு ஒன்றாக மது குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அப்போது மோகனின் காலில் லோகேஷ் கத்தியால் வெட்டினார். இதில் கால் நரம்பு துண்டிக்கப்பட்டு ரத்தம் வெளியேறியது. போதையில் இருந்த மோகன் காலில் வெட்டுபட்ட நிலையில் சிறிது தூரம் நடந்து சென்று கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவரது உயிர் பிரிந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

மோகனின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மோகனை கொலை செய்த லோகேஷ் கைது செய்யப்பட்டார்.

மாங்காட்டை அடுத்த கோவூர் அனு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (28) பெயிண்டர். நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் கோவூர் ஈஸ்வரன் நகர் பகுதியில் யுவராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் மதுபாட்டில்கள் மற்றும் கொலையாளிகள் விட்டுச்சென்ற அரிவாள் கிடந்தது. மாங்காடு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

யுவராஜின் மனைவி குடும்பதகராறில் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. குடும்ப தகராறில் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com