

கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் நினைவிடம் உள்ளது. இங்கு தேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 54-வது குருபூஜை விழா இன்று தொடங்கியது.
நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, தங்கவேல், ராமச்சந்திரன் முன்னிலையில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் யாகசாலை பூஜைகளை நடத்தினார்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நினைவிடம் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். ஏராளமானோர் முடிகாணிக்கையும் செலுத்தினர்.
இன்று முத்துராமலிங்க தேவரின் ஆன்மீக விழா கொண்டாடப்பட்டது. ஏராளமானோர் பசும்பொன் வந்து அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
2-ம் நாளான நாளை தேவரின் அரசியல் விழா கொண்டாடப்படுகிறது. இதிலும் ஏராளமானோர் பங்கேற்று நினைவிடம் மற்றும் அங்குள்ள தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.
30-ந்தேதி தேவரின் குருபூஜை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் நாளை (29-ந்தேதி) மாலை மதுரை வருகின்றனர்.
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி. தலைமையில் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார்.
3 நாட்கள் நடைபெறும் விழாவுக்கு ஏராளமானோர் வருவார்கள் என்பதால் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வாகனங்கள் வந்து செல்ல வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆளில்லா விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. கமுதி, அபிராமம், பசும்பொன், கோட்டைமேடு பகுதிகளில் போலீசார் இன்று முதல் ரோந்து பணியை தொடங்கினர். இன்று முக்குலத்தோர் பாசறை, மூவேந்தர் பண்பாட்டுக்கழகம் போன்றவற்றின் சார்பில் தேவர் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கமுதி பஸ் நிலையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மூவேந்தர் பண்பாட்டு கழகத்தினர் பாலாபிஷேகம் செய்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையில் அணிவிக்கப்படும் தங்க கவசம் நேற்று மாலை வங்கியில் இருந்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வசம் வழங்கப்பட்டது. அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட கவசத்தை ராமநாதபுரம் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டியில் அந்த மாவட்ட கலெக்டர் நடராஜன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு தங்க கவசம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், கலெக்டர்கள் நடராஜன், வீரராகவராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.