

முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள மங்களநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 55). விவசாயி. இவரது மனைவி உமாராணி, மகள் ரம்யா.
நேற்று இரவு பக்கத்து ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்காக மனைவி, மகளை வீட்டில் விட்டுவிட்டு ராமகிருஷ்ணன் மட்டும் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நள்ளிரவு ராமகிருஷ்ணனின் வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அவரது மனைவி உமாராணி தனது கணவர் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டதாக எண்ணி கதவை திறந்துள்ளார்.
அப்போது முகமூடி அணிந்திருந்த மர்மநபர் ஒருவர் உமாராணியை கீழே தள்ளி பயங்கர ஆயுதங்களுடன் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என கூறி மிரட்டினார்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து ரூ.2.80 லட்சம் ரொக்கம், 13 பவுன் நகை உள்ளிட்டவைகளை கொள்ளையடித்தார்.
அப்போது வீட்டைவிட்டு வெளியில் ஓடிவந்த உமா ராணி , ‘‘திருடன்... திருடன்’’ என சத்தம்போடவே அந்த முகமூடி வாலிபர் சுதாரித்து கொண்டார். உடனே கொள்ளையடித்த நகை- பணத்தை எடுத்து கொண்டு வீட்டில் இருந்து சற்று தூரத்தில் மோட்டார் சைக்கிளில் காத்திருந்த தனது கூட்டாளியுடன் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து உமா ராணி, தனது கணவர் ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். கோவில் திருவிழாவில் இருந்து வீட்டிற்கு வந்த அவரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசில் ராமகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் வீட்டை சோதனை செய்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராமகிருஷ்ணன் வீட்டில் இல்லை என்பதை அறிந்துதான் முகமூடி கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமகிருஷ்ணனுக்கு தெரிந்தவர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்களிடம் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.