

முதுகுளத்தூர்:
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள சுவாத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 55) விவசாயி. இவருக்கும், உறவினரான வேலாயுதம் (35) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது.
இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு ராமு வயலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது எதிரே வேலாயுதம் வந்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது அடிதடியாக மாற ஆத்திரம் அடைந்த வேலாயுதம் தான் வைத்திருந்த அரிவாளால் ராமுவை வெட்டினார். இதில் தலை துண்டான ராமு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது குறித்து அவரது மனைவி ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் கீழத்தூவல் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வேலாயுதத்தை கைது செய்தார்.