மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாவிட்டால் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம்: முத்தரசன்

மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாவிட்டால் மக்களைத் திரட்டி கவர்னர் மாளிகையும், சட்டசபையையும் முற்றுகையிடுவோம் என முத்தரசன் கூறியுள்ளார்.
மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடாவிட்டால் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம்: முத்தரசன்
Published on

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘இந்தியாவை மீட்போம்- தமிழகத்தை மீட்போம்‘ என்ற வகையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி செப்டம்பர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைப்பயணம் நடத்தப்படுகிறது.

காவிரி நதிநீர் பிரச்சனை, நீட் தேர்வு பிரச்சனை, கட்டாய இந்தி திணிப்பு என அனைத்திலும் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் இணைந்த நிலையில், டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கவர்னரை சந்தித்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க மனு அளித்தனர். குறுக்கு வழியில் ஆட்சி தொடருவதற்கு கவர்னர் துணை போக கூடாது.

இன்று இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் கவர்னரை சந்தித்து சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என மனு அளிக்க உள்ளோம்.

தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நாளை (31-ந்தேதி) ஜனாதிபதியை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்.


தமிழக அரசு செயல்படாமல் உள்ளது. மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது. எனவே, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும். அறுதிப் பெரும்பான்மை இல்லாவிட்டால் சட்டப் பேரவையைக் கலைக்க வேண்டும்.

கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மக்களைத் திரட்டி கவர்னர் மாளிகையும், சட்டசபையையும் முற்றுகையிடுவோம். தமிழக அமைச்சர்கள் வெளியே செல்ல முடியாத வகையில் கருப்புக்கொடி காட்டுவோம்.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு திருப்தி அளிக்கிறது. பா.ஜ.க. மற்றும் ஆளும்கட்சியினர் கூறி வருவது போல தி.மு.க. கொல்லைப்புறமாக ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அ.தி.மு.க. என்ற நெல்லிக்காய் மூட்டை சிதறி விட்டது. அதை ஒன்றிணைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி செயல்பட்டு, அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார். ஆனால், அது நிச்சயம் நடக்காது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com