கமி‌ஷன் வாங்குவதற்கு 8 வழி பசுமை சாலையை போடுகிறார்கள்: முத்தரசன் தாக்கு

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கமி‌ஷன் வாங்குவதற்கு 8 வழி பசுமை சாலையை போடுகிறார்கள் என்று முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். #mutharasan #chennaisalemgreenexpressway
கமி‌ஷன் வாங்குவதற்கு 8 வழி பசுமை சாலையை போடுகிறார்கள்: முத்தரசன் தாக்கு
Published on

சேலம்:

சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு, மாநில அரசு சேர்ந்து கொண்டு சேலத்திற்கும் சென்னைக்கும் விரைவாக செல்லக்கூடிய 8 வழிச்சாலை என்ற பெயரில் 5 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுடைய நிலங்களை அபகரித்து 10 ஆயிரம் ரூபாய் கோடி செலவில் சாலை அமைக்க திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஒரு திட்டத்தை அறிவிக்கிறபோது, சம்பந்தப்பட்ட விவசாயிகளுடைய, பொதுமக்களுடைய கருத்தறிந்து அதற்கு பிறகு செயல்படுத்த முன்வர வேண்டும். அல்லது அறிவித்த பிறகு மக்கள் கூறிய கருத்துக்களுக்கு செவி கொடுத்து கேட்க வேண்டும்.

அதற்கு மாறான முறையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மிக கடுமையான அடக்குமுறைகளை மேற்கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி பெண்களை அச்சுறுத்தி நிலங்களை கையகப்படுத்தி கல் ஊன்றுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.

கல் ஊன்றுகின்ற இடத்தில் அனைத்திலும் பெண்களே முன்னின்று கல்களை அகற்றுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த 8 வழிச்சாலை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் திரும்ப, திரும்ப வலியுறுத்தி கூறிகின்றோம். அதற்கான முறையில் தான் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடைபெறுகிறது.

அரசு இந்த திட்டத்தை கைவிடவில்லை என்று சொன்னால் 5 மாவடங்களிலும் இந்த போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் மற்றும் ஒரே கருத்துக்கள் உடைய அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து பிரமாண்டமான போராட்டங்கள் நடத்துவதற்கு ஆயத்த ஆவோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையிலும் சரி, வெளியிலும் சரி பொய் சொல்கிறார். நேற்று வரை விவசாயிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிலர் ஜாமீனில் வெளியே வந்து இருக்கிறார்கள்.

ஆகவே தானாகவே விவசாயிகள் முன்வந்து 90 சதவீத நிலத்தை கொடுத்து விட்டார்கள் என்று முதல்-அமைச்சர் கூறுவது அப்பட்டமான பொய்.

8 வழி பசுமைச்சாலையில் 7, 8 மலைகள் பறிபோகிறது. இந்த மலைகளை உடைத்து அதில் இருக்கிற விலை மதிக்க முடியாத கனிம வள செல்வங்களை கொள்ளையடிப்பதற்காக தான் இந்த சாலையே போடப்படுகிறது என்பதை பகிரங்கமாக தெரிவிக்கிறோம்.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து இவர்கள் கமி‌ஷன் வாங்குவதற்கு இந்த சாலையை போடுகிறார்கள். பொதுமக்களுக்காக அல்ல.

இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #chennaisalemgreenexpressway

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com