மனைவியை உல்லாசத்துக்கு அழைத்த பிரபல ரவுடி வெட்டிக்கொலை- கணவன் வெறிச்செயல்

விழுப்புரம் அருகே மனைவியை உல்லாசத்துக்கு அழைத்த பிரபல ரவுடியை நண்பர்களுடன் சேர்ந்து கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை
கொலை
Published on

வானூர்:

விழுப்புரம் அருகே கோட்டக்குப்பம் போலீஸ் சரகம் சின்னமுதலியார் சாவடியை சேர்ந்தவர் மணவாளன் (வயது 27). பிரபல ரவுடி. திருமணமாகாத இவர் மீது கோட்டக்குப்பம், புதுவை போலீஸ் நிலையங்களில் 2 கொலை வழக்குகள் உள்ளன.

நேற்று இரவு சின்ன முதலியார் சாவடி மயான பகுதியில் மணவாளன் அரிவாளால் வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்தனர்.

பிணமாக கிடந்த ரவுடி மணவாளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சின்ன முதலியார் சாவடியை சேர்ந்த பிரபல ரவுடி ஆனந்த் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.

கைதான ஆனந்த், கொலை செய்யப்பட்ட மணவாளன் ஆகிய 2 பேரும் அந்த பகுதியில் ரவுடிகளாக வலம் வந்துள்ளனர். இவர்கள் கொலை உள்ளிட்ட பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த் மனைவியை மணவாளன் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இது குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.

ஆத்திரம் அடைந்த ஆனந்த் நேரடியாக மணவாளனிடம் சென்று இது குறித்து எச்சரித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. ஆனாலும் மணவாளன், ரவுடி ஆனந்த் மனைவியின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்டு அடிக்கடி செல்போனில் பேசி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

இது ஆனந்துக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மணவாளனை தீர்த்து கட்ட அவர் முடிவு செய்தார். அதன்படி ஆனந்த் தனது நண்பர்கள் 3 பேரை சின்னமுதலியார் சாவடி மயான பகுதியில் காத்திருக்க கூறினார்.

நேற்று மாலை ஆனந்த் செல்போனில் மணவாளனிடம், வா மது அருந்த செல்லலாம் என்று ஆசைவார்த்தை கூறி பேசியுள்ளார். இதனை நம்பிய மணவாளன் உடனே அங்கு வந்தார். ஆனந்த் கூறியபடி சின்னமுதலியார் சாவடி மயான பகுதிக்கு சென்றனர். அங்கு 2 பேரும் அமர்ந்து மது குடித்தனர்.

அப்போது ஆனந்த் நான் ஏற்கனவே என் மனைவியிடம் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்ற பலமுறை கூறியுள்ளேன். ஆனாலும், நீ கேட்கவில்லை என்று கூறினார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆனந்த் அரிவாளால் மணவாளனை வெட்டினார். அப்போது ஏற்கனவே அங்கு மறைந்திருந்த ஆனந்த் நண்பர்கள் 3 பேர் அங்கு வந்தனர். அவர்களும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மணவாளனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் மணவாளன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனந்த் கொடுத்த தகவலின்பேரில் அவரது நண்பர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com