

சண்டிகார்:
பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் உறவினர் அசோக்குமார். ஒப்பந்ததாரர். இவரது மனைவி ஆஷாராணி. இவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் அருகேவுள்ள தார்யால் என்ற கிராமத்தில் வசித்து வந்தனர். கடந்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதி நள்ளிரவில் இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அசோக்குமார், ஆஷாராணி மற்றும் அவர்களது மகன் கவுசல் ஆகியோரை கடுமையாக தாக்கினர். இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கவுசல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 31-ந் தேதி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஷாராணி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த சுரேஷ் ரெய்னா உறவினர்கள் இறந்ததால் இந்தியா திரும்பி பதன்கோட் வந்தார். சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்ததால், தனிப்படை அமைக்கப்பட்டு முதல்கட்டமாக 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.