உ.பி.: முலாயம்சிங் குடும்பத்தினரை ஒருங்கிணைத்த தீபாவளி பண்டிகை
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த முலாயம் சிங் குடும்பத்தினரை தீபாவளி பண்டிகை இணைத்துள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் குடும்பத்தினரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது ஆட்சியை பா.ஜ.க.விடம் இழந்தது. இதையடுத்து, அங்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
உ.பி., முதல் மந்திரியாக இருந்த அகிலேஷ் யாதவுக்கும், முலாயமின் சகோதரர் ஷிவ்பாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் முலாயம் சிங் ஷிவ்பாலை ஆதரித்தார். இதனால் தந்தை - மகன் இடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஓராண்டுக்கு மேலாக முலாயம் குடும்பத்தினர் எந்த பண்டிகையையும் ஒன்றாக கொண்டாடவில்லை.
ஆனால், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஒவ்வொரு ஆண்டும் தனது சொந்த ஊரான எடாவா மாவட்டத்தில் உள்ள சைபை கிராமத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார். தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட பிளவால் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை.
இந்நிலையில், வட மாநிலங்களில், தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. உத்தரபிரதேசம் மாநிலத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள சைபை கிராமத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் தீபாவளி கொண்டாடினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல் மந்திரியும், முலாயமின் மகனுமான அகிலேஷ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அப்போது முலாயம் சிங் மற்றும் அங்கிருந்த முலாயம் சகோதரர் ஷிவ்பாலின் கால்களில் விழுந்து அகிலேஷ் யாதவ் ஆசி பெற்றார்.
இதுகுறித்து சமாஜ்வாடி கட்சியினர் கூறுகையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த முலாயம் சிங் குடும்பத்தை தீபாவளி பண்டிகை ஒற்றுமைப்படுத்தி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளனர்.

