

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடற்கரையில் ரூ.3 கோடியே 84 லட்சத்தில் முக்கடல் சங்கமம் புதுப்பொலிவு பெறுகிறது. பக்தர்கள் புனித நீராடும் படித்துறையில் கைப்பிடி சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய 3 கடல்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடம் முக்கடல் சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த முக்கடல் சங்கமத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாகாளய அமாவாசை ஆகிய விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்து விட்டு இந்த முக்கடல் சங்கத்தில் புனித நீராடுவார்கள். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் கோவில் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா மற்றும் கொடைவிழாக்கள், வீடு கிரகபிரவேஷங்கள் போன்ற விஷேசங்களுக்கும் இந்த முக்கடல்சங்கம் சங்கமத்தில் இருந்து கடல் தீர்த்தம் எடுத்து செல்வார்கள். அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த இந்த முக்கடல் சங்கமம் பராமரிக்கப்படாமலும் பாறைகள் நிறைந்தும் காணப்பட்டது.
இங்கு புனித நீராடுவதற்கான படித்துறை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடவரும் பக்தர்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறையில் அடிபட்டு ரத்த காயத்துடன் எழுந்து செல்லும் அவல நிலை இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் படித்துறை கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கருங்கற்களால் கைப்பிடியுடன் படித்துறை வசதி மற்றும் சுற்றுலா பயணிகள் கடல் அழகையும் சூரியன் உதயமாகும் காட்சியையும் பார்த்து ரசிப்பதற்காக 9 அடுக்கு கொண்ட காட்சிகூடம், தடுப்பு சுவர் பகுதியில் கருங்கல் சிற்பங்கள் அமைப்பது, கடற்கரை பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர் வசதி, குளியல் மற்றும் உடை மாற்றும் அறை உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பணிகளை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் ரூ.3 கோடியே 84 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், உதவிபொறியாளர் இர்வின் ஜெயராஜ் மற்றும் பணி மேற்பார்வையாளர் பாபு ஆகியோர் மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது. அழகுபடுத்தும் பணியால் தற்போது கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் புதுப்பொலிவுபெற்று வருகிறது.
கொரோனா பரவல் முடிந்து கன்னியாகுமரி இயல்பு நிலைக்கு வரும் போது, முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராட வருவார்கள். அதற்குள்ளாக பணிகளை முடிக்க திட்டமிட்டு தீவிரமாக பணிகள் நடந்து வருகின்றன.