முக்கடல் சங்கமத்தில் படித்துறை அமைக்கும் பணி தீவிரம்

முக்கடல் சங்கமத்தில் படித்துறை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராட்சத கருங்கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
ராட்சத கருங்கற்கள் பதிக்கும் பணி நடந்தது
ராட்சத கருங்கற்கள் பதிக்கும் பணி நடந்தது
Published on

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தியப்பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய 3 கடல்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கின்றன. இந்த முக்கடல் சங்கமத்தில் ஆடிஅமாவாசை, தைஅமாவாசை, புரட்டாசி மாகாளய அமாவாசை ஆகிய விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பார்கள்.

அதுமட்டுமின்றி தினமும் ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்துரசித்து விட்டு முக்கடல்சங்கத்தில் புனித நீராடுவார்கள். அதன் பிறகுதான் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

மேலும் கோவில் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா மற்றும் கொடைவிழாக்கள் வீடு கிரகபிரவேஷங்கள் போன்ற விஷேசங்களுக்கும் இந்த முக்கடல்சங்கம் சங்கமத்தில் இருந்து கடல் தீர்த்தம் எடுத்து செல்வார்கள். அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த இந்த முக்கடல் சங்கமம் பராமரிக்கப்படாமலும் பாறைகள் நிறைந்தும் காணப்பட்டது. இங்கு புனித நீராடுவதற்கான படித்துறை வசதிகளும் இல்லாமல் இருந்தது. இதனால் முக்கடல்சங்கத்தில் புனித நீராட வரும் பக்தர்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறையில் அடிபட்டு ரத்தகாயத்துடன் எழுந்து செல்லும் அவல நிலை இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கான படித்துறை வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக ரூ.3 கோடியே 84 லட்சம்செலவில் படித்துறை வசதி மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யும் பணிகளை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

தற்போது படித்துறை அமைக்கப்பட்டு உள்ள இடத்தில் கிரேன் மூலம் படிக்கட்டுகளுக்கான ராட்சத கருங்கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த பணிகள் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ் மற்றும் பணி மேற்பார்வையாளர் பாபு ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com