

களியக்காவிளை:
குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சோதனை சாவடி உள்ளது.
தமிழக-கேரளாவை இணைக்கும் எல்லை பகுதியான இங்கு தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் கேரளாவிற்கு செல்லும்போதும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களும் இந்த சோதனை சாவடியில் பதிவு செய்ய வேண்டும்.
அதற்காக தற்காலிக அனுமதிச்சீட்டு வழங்கப்படும். போக்குவரத்து சோதனை சாவடியில் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஏற்கனவே புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு போக்குவரத்து சோதனை சாவடியில் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வாகன ஓட்டிகள் பணியில் இருந்த அதிகாரியிடம் தகராறில் ஈடுபட்டனர். போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து போலீசார் வாகன ஓட்டிகளை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், சோதனை சாவடியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாங்கள் கேட்டால் எங்களை தரக் குறைவாக பேசுவதாக கூறுகிறார்கள். முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.