களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள் மோதியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
Published on

களியக்காவிளை:

களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூட்டை சேர்ந்தவர் வென்சஸ்லாஸ் (வயது 58). இவரது மனைவி பேபி (55).

பேபி கடந்த 14-ந் தேதி படந்தாலுமூடு பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.க்கு பணம் எடுக்க சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார். இதற்காக சாலையை கடந்த போது களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் பேபி தூக்கி வீசப்பட்டார்.

இதில் பேபியின் தலையில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பேபி பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இது பற்றி களியக்காவிளை போலீசில் வென்சஸ்லாஸ் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி மீது மோதிய மோட்டார் சைக்கிளை தேடினர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது பாறசாலை பகுதியை சேர்ந்த வாலிபர் என தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com