மோட்டார் சைக்கிள் மீது கார் உரசியதால் மருத்துவ மாணவியின் கன்னத்தில் அறைந்த வக்கீல்

மோட்டார் சைக்கிள் மீது கார் உரசியதால் நடுரோட்டில் மாணவியின் கன்னத்தில் வக்கீல் திடீரென தாக்கிய சம்பவம் அமைந்தகரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிள் மீது கார் உரசியதால் மருத்துவ மாணவியின் கன்னத்தில் அறைந்த வக்கீல்
Published on

போரூர்:

கீழ்ப்பாக்கம் மில்லர் சாலையை சேர்ந்தவர் சுரபிரத்னா (22), பல் மருத்துவ கல்லூரி மாணவி. இவர் காரில் அமைந்தகரை அண்ணா வளைவு சிக்னல் அருகே நின்று விட்டு புறப்பட்டு சென்றார்.

அப்போது அசோக்நகர் 10-வது அவின்யூவை சேர்ந்த வக்கீல் எழில்ராயன் என்பவர் தனது மகளுடன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மாணவி சுரபி ரத்னாவின் கார் லேசாக உரசி சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த எழில்ராயன், மாணவி சுரபிரத்னாவின் காரை விரட்டிச் சென்று அமைந்தகரை மார்க்கெட் சிக்னலில் வழிமறித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே நடுரோட்டில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எழில் ராயன் திடீரென மாணவி சுரபி ரத்னாவின் கன்னத்தில் தாக்கினார். வலியால் அவர் அலறி துடித்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சுரபி ரத்னா அமைந்தகரை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து வக்கீல் எழில் ராயனை கைது செய்தார். அவர் மீது ஆபாசமாக பேசி பெண்ணை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com