

பீளமேடு:
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). காவலாளி. இவர் இன்று காலை அவினாசி ரோட்டில் உள்ள ஹோப் கல்லூரி அருகே உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது சித்ராவில் இருந்து கல்லூரிக்கு 2 மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். சாலையை கடக்க முயன்ற காவலாளி சீனிவாசன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். 2 கல்லூரி மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்த 2 மாணவர்களையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பலியான சீனிவாசனின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.