மகனின் சிகிச்சைக்காக மடிப்பிச்சை கேட்டு கதறிய தாய்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் விளையாட்டு விழா கடந்த ஜனவரி 31-ந் தேதி பாகாயம் சி.எம்.சி. மைதானத்தில் நடந்தது.
அப்போது பலூன்களுக்கு காற்று நிரப்பும் ‘ஹீலியம்’ கியாஸ் சிலிண்டர் வெடித்து சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜிதிஷ்குமார் என்ற பிளஸ்-2 மாணவன் பலியானான்.
மேலும் நவீன் என்ற மற்றொரு பிளஸ்-2 மாணவன் பலத்த காயமடைந்தான். அந்த மாணவனுக்கு சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயமடைந்த மாணவன் தரப்பில் பள்ளி நிர்வாகம் மீது அப்போதே கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாணவனுக்கான மருத்துவ சிகிச்சை செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்கவில்லை என புகார் கூறப்படுகிறது. இதனால் உரிய சிகிச்சை கிடைக்காததால், மாணவன் நவீனுக்கு ஒரு கண் பார்வை முழுவதும் பறிபோனது.
இந்த நிலையில், பார்வை பறிபோன மாணவன் நவீனுடன் தந்தை சிவலிங்கம். தாய் செல்வி, சித்தி புஷ்பவள்ளி ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
கலெக்டர் ராமனை சந்தித்து மருத்துவ செலவுகளை பள்ளி நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டதால் எனது மகனின் பார்வை பறி போனது என்று கூறி அவர்கள் கதறி அழுதனர்.
மாணவனின் தாய் கலெக்டர் முன்பு தரையில் படுத்து புரண்டு அழுதார். சித்தி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, மாணவனின் தாய் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
நவீனுக்கு 17 வயதாகிறது. அவனது தந்தை, லாட்ஜில் கூலிக்கு வேலை செய்கிறார். சிலிண்டர் வெடித்த விபத்தில் பள்ளி நிர்வாகம் மீது புகார் கூறியதால், சிகிச்சைக்கான செலவுகளை அவர்கள் ஏற்கவில்லை. எங்களுக்கு ஒரே மகன் தான் உள்ளான்.
பிளஸ்2 தேர்வு நடந்து வருகிறது. பார்வை பறிபோனதால் மகனின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிட்டது. முழுமையான சிகிச்சை அளிக்க எங்களிடம் வசதி இல்லை என்று உருக்கமாக கூறினர்.
புகார் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க அதிரடியாக உத்தரவிட்டார்.
கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வந்த மாணவனின் தாய் செல்வி தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்யும்படி தனது சேலையின் முந்தானையை விரித்து அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் மடிப்பிச்சை கேட்டு கதறி அழுதார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. அவரை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். #Tamilnews

