ஆரல்வாய்மொழி அருகே தீக்குளித்த மகனை காப்பாற்ற சென்ற தாய் கருகி பலி

ஆரல்வாய்மொழி அருகே தகராறில் தீக்குளித்த மகனை காப்பாற்ற சென்ற தாய் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆரல்வாய்மொழி அருகே தீக்குளித்த மகனை காப்பாற்ற சென்ற தாய் கருகி பலி
Published on

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழியை அடுத்த வெள்ளமடம் திருப்பதிசாரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஆறுமுகம் (வயது 45). இவர்களுக்கு மணிகண்டன் (25), கார்த்திக் (23) என 2 மகன்கள் உள்ளனர்.

இதில் கார்த்திக் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். மணிகண்டன் பாலிடெக்னிக் முடித்து உள்ளார்.

சம்பவத்தன்று மகன் மணிகண்டன் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதனை தாயார் ஆறுமுகம் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆறுமுகம் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார்.

இதில் வீட்டில் இருந்த மண்எண்ணையை தன்மீது ஊற்றிக்கொண்டார். இதனை பார்த்த மணிகண்டன் முதலில் நான் சாகிறேன் எனக்கூறி தாயிடம் இருந்த மண்எண்ணையை பிடுங்கி தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டார். வலியால் அவர் அலறித் துடித்தார்.

தனது கண்முன்னே மகன் தீ வைத்துக்கொண்டதை கண்ட தாய் பதற்றத்துடன் தீயை அணைக்க முயன்றார். அப்போது தாயின் மீதும் தீ பற்றிக்கொண்டது. இதில் இருவரும் தீயில் கருகி வலியால் துடித்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர்.

அவர்களை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான ஆறுமுகம் தனது கணவரை பிரிந்து மகன்களுடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் மகனை காப்பாற்றச் சென்ற அவர் பலியான சம்பவம் அந்த பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com