சேலத்தில் ரூ.50 ஆயிரத்திற்கு குழந்தையை விற்ற பெண் பற்றி பரபரப்பு தகவல்

சேலத்தில் பிறந்த குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேலத்தில் ரூ.50 ஆயிரத்திற்கு குழந்தையை விற்ற பெண் பற்றி பரபரப்பு தகவல்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராணி (வயது 37). இவருக்கும் பெங்களூரை சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த ஆண்டு மேட்டூரில் கிராம உதவியாளர் பணிக்கு ராணி விண்ணப்பிக்க சென்ற போது புதுச்சாம்பள்ளி பகுதியை சேர்ந்த பாலு என்வருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது தான் கப்பலில் வேலை பார்ப்பதாக பாலு கூறியதால் அதனை நம்பிய ராணி அவருடன் நெருங்கி பழகினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த மே மாதம் ராணிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

அதற்கு ராணியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமேஸ்வரத்தை சேர்ந்த பாலு என்ற டாக்டரிடம் ரூ. 50 ஆயிரம் வாங்கி விட்டு குழந்தையை கொடுத்தார் . இதற்கு சேலம் அரசு ஆஸ்பத்திரி ஒப்பந்த ஊழியர் ஜெயா என்பவர் உதவினார்.

இந்த நிலையில் குழந்தை தனக்கு வேண்டும் என்றும் அதனை மீட்டு தருமாறும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறினார். உடனே சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அப்போது மேச்சேரி பகுதியில் வைத்து குழந்தையை டாக்டரிடம் ஒப்படைத்தது தெரிய வந்தது.

மேலும் குழந்தையை வாங்கி சென்ற அந்த டாக்டரை அதிகாரிகள் தொடர்பு கொண்டு கேட்ட போது தனக்கு குழந்தை இல்லாததால் அந்த குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு வாங்கி சென்றதாக கூறினார்.

மேலும் ராணி விரும்பினால் அதனை அவரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் இன்று குழந்தையை ஒப்படைக்க மேச்சேரி வருவதாகவும் கூறி உள்ளார். ஆனால் அவர் வருவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டாக்டர் பாலுவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் அவரது மனைவிக்கு குழந்தை இல்லாததால் வயிற்று பகுதியில் துணியை கட்டி தான் கர்ப்பமாக இருப்பதாக அவரது மனைவி ஏமாற்றி வந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பும் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தனது மனைவி குழந்தையை பெற்றதாக உறவினர்களிடம் கூறுவதற்காக சேலத்திற்கு வந்து இந்த குழந்தையை வாங்கி சென்றுள்ளார். தற்போது ராணி குழந்தையை கேட்பதால் என்ன செய்வதென்று டாக்டர் தம்பதியினர் பரிதவித்து வருகின்றனர்.

மேலும் கப்பலில் வேலை பார்ப்பதாக கூறி ராணியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பாலு ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அதில் 3 மனைவிகளும் பிரிந்து சென்றதால் 4-வதாக ராணியை திருமணம் செய்துள்ளார்.

முதல் மனைவி ஈரோட்டிலும், 2-வது மனைவி கோபி செட்டி பாளையத்திலும், 3-வது மனைவி மேட்டூரிலும், 4-வதாக திருமணம் செய்த ராணி மேச்சேரியில் வசித்து வந்துள்ளனர். இதனால் மேலும் பல பெண்களை இது போல ஏமாற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com