

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே மதுகுடித்ததை தாயார் கண்டித்ததால், நண்பர்களிடம் போனில் தகவல் கூறி விட்டு பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தக்கலை அருகே திருவிதாங்கோடு முத்து வைரவர்தெரு பகுதியை சேர்ந்தவர் சுதீஷ்குமார் (வயது 32), பெயிண்டர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மேலும், மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
தினமும் சுதீஷ்குமார் மதுகுடித்து விட்டு வந்து தாயார் ஈஸ்வரியிடம் (65) தகராறு செய்து வந்தார். இதனை ஈஸ்வரி கண்டித்தார். நேற்று முன்தினம் ஈஸ்வரி அந்த பகுதியில் உள்ள தனது மூத்த மகன் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு வழக்கம் போல் சுதீஷ்குமார் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர், அவர் தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை விட்டு பிரிந்து செல்வதாக கூறினார்.
இந்தநிலையில் நேற்று காலை சுதீஷ்குமார் வீட்டிற்கு வந்த அவரது தாயார் ஈஸ்வரி, வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சுதீஷ்குமார் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மது குடிப்பதை கண்டித்ததால் சுதீஷ்குமார் தற்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து சுதீஷ்குமாரின் தாயார் ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நண்பர்களிடம் செல்போனில் தெரிவித்துவிட்டு சுதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.