புதுக்கோட்டை அருகே மண்எண்ணெய் ஊற்றி மாமியார் எரித்துக்கொலை- மருமகள் கைது

புதுக்கோட்டை அருகே மண்எண்ணெய் ஊற்றி மாமியாரை எரித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்தனர்.
பிரதீபா
பிரதீபா
Published on

திருவரங்குளம்:

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை அருகே உள்ள மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன்(வயது 60). இவர் வன்னியம்பட்டியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராஜம்மாள்(55). இவர்களுக்கு 2 மகள்களும், ரமேஷ்(28) என்ற மகனும் உள்ளனர். ரமேஷ், புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்து கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், வன்னியம்பட்டியை சேர்ந்த பிரதீபாவுக்கும்(23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தீயில் உடல் கருகிய நிலையில் ராஜம்மாள் கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த வல்லத்திராகோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பிரதீபாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ராஜம்மாள் எரித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், ராஜம்மாள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் பேசுவதை தடுத்ததாகவும், அதனால் அவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும், பிரதீபா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து வல்லத்திராகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்பாள் வழக்குப்பதிவு செய்து பிரதீபாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மாமியாரை எரித்துக்கொன்றதாக மருமகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com