

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் மேட்டுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 47) விவசாயி. இவரது தாய் அய்யம்மாள் (70) கடந்த 15 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் நேற்று 15-ம் நாள் துக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று காலை வெங்கடாசலம் வழக்கம் போல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். மின் மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் பெட்டியில் கை வைத்தபோது அதில் இருந்து மின்சாரம் தாக்கி வெங்கடாசலம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வெங்கடாசலம் வராததால் உறவினர்கள் வயலுக்கு தேடி சென்றனர். அங்கு அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரித்தபோது மின் மோட்டார் இயக்கும் தகரப்பெட்டியில் எலி கடித்த வயர் மோதிக் கொண்டிருந்ததும், அப்போது பெட்டியில் கை வைத்த வெங்கடாசலம் உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் வெங்கடாசலத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் இறந்த 15-வது நாள் துக்க நிகழ்வுக்கு வந்த உறவினர்கள் மகன் இறந்த துக்க நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.