தாய்-மகள் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலூர் அருகே தாய்-மகள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அரசியல் கட்சியினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாய்-மகள் மீது தாக்குதல்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூரை சேர்ந்த ஆராயி, இவரது மகள் தனம், மகன் சமயன் ஆகியோர் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டனர். இதில் சமயன் சம்பவ இடத்திலேயே பலியானான். தாய்-மகள் 2 பேரும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த தாக்குதல் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே அரசியல் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு தேசிய குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் நல்லக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் வன்முறைகளும், தலித் மக்களுக்கு எதிரான தாக்குதலும் தொடர்ந்து நடந்து வருகிறது. வெள்ளம்புத்தூர் கிராமத்தில் 7 வயது சிறுவன் மர்ம மனிதர்களால் கொலை செய்யப்பட்டான். அவனது தாய் மற்றும் சகோதரி தாக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இனி இதுபோல் எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு சாதகமாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com