புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தில் தாய்-குழந்தை பலி

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை பிரசவத்தில் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தில் தாய்-குழந்தை பலி
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஏ.மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் நிரேஷ்குமார். இவரது மனைவி ஹன்சிகா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 2-ந்தேதி பிரசவத்திற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை ஹன்சிகா திடீரென உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

டாக்டர்களின் தவறான சிகிச்சையால்தான் ஹன்சிகா மற்றும் குழந்தை இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் டாக்டர்களுக்கும், ஹன்சிகாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் மருத்துவமனை முன்பு முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனிடையே அங்கு ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக வந்திருந்த போலீசார், ஹன்சிகாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடனும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலையாமல் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி மகப்பேறு துறை தலைவர் கற்பகம் கூறும்போது, அனுசுயா கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்தநிலையில் தான் அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

நாங்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம். இருப்பினும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு இருந்ததாலும், ரத்த அணுக்கள் மிகக்குறைவாக இருந்ததாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையும் இறந்து விட்டது.

இதுகுறித்து அவரது உறவினர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து விட்டதாகவும், சரியான புரிதல் இல்லாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதனிடையே போலீசார் மற்றும் மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து நடத்திய பேச்சு வார்த்தையை அடுத்து ஹன்சிகாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் தாய்-சேய் உடலை பெற்று சென்றனர்.

பிரசவத்தின் போது தாய்- சேய் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com