அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை - கலெக்டர் நேரில் ஆய்வு

அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை - கலெக்டர் நேரில் ஆய்வு
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தாலுகா அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் சுமார் 40 வருடங்களாக 150-க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைகாரர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் தொழிலுக்காக வெளியூர் செல்லும்போது தங்கள் குழந்தைகளையும் அழைத்து செல்கின்றனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று அய்யம்பாளையம் புதூர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் கலெக்டர் அப்பகுதி மக்களிடம் பேசியதாவது:-

மக்களின் நலனுக்காகவும், தொழிலை மேம்படுத்தவும் அரசு மூலமும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சுயதொழில் தொடங்கவும் பல்வேறு வகையில் லோன் வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்வில்லை என்று அறிந்தேன். இங்கே உங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஆரம்பப் பள்ளி கற்கும் வகையில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி இங்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளியில் சேர்க்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாதம் ரூ.400 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பள்ளியில் மதிய உணவு வழங்கப்படும். இதில் உங்களில் விருப்பம் உள்ள ஒருவருக்கு சமையலர் வேலை வழங்கப்படும். இந்த பள்ளியில் பாடம் நடத்த உங்களில் யாராவது பட்டப்படிப்பு படித்து இருந்தால் அவர்களுக்கு வேலையும் வழங்கப்படும். வாழ்வாதாரத்திற்கு தொழில் முக்கியம் தான், அதை விட இந்த காலத்தில் கல்வி மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அந்த பகுதி மக்களிடம் அங்கு ஏதேனும் குறைகள் உள்ளதா? என்று கேட்டறிந்தார். அதற்கு, எங்கள் பகுதியில் குடிநீர் வசதி இல்லை. மேலும் குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைக்க சாதி சான்றிதழ் கேட்கிறார்கள். எனவே சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு 150 குடும்பங்கள் உள்ளன. இதில் 70 பேருக்கு வீடு உள்ளது. ஆனால் மற்றவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து ஓரிரு நாட்களில் இந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சாதி சான்றிதழ் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அப்போது மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கிறிஸ்டீனா டார்த்தி, மாவட்ட குழந்தை நல அலுவலர் கோகிலா, மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வன், பள்ளிகளின் ஆய்வாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், தாசில்தார் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com