ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து ஆர்.கே.நகரில் பணம் சப்ளையா?: தினகரன் பதில்

20 ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து ஆர்.கே.நகரில் பணம் சப்ளை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.
ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து ஆர்.கே.நகரில் பணம் சப்ளையா?: தினகரன் பதில்
Published on

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த டி.டி.வி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த கருத்து கணிப்புகள் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. மக்களின் கருத்துகள்தான் முக்கியம். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எங்களுக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள். எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத, துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர இது நல்ல தொடக்கமாக இருக்கும்.

மத்திய அரசின் செயல்பாடுகளை பார்த்துதான் மாநில அரசும் செயல்படு கிறது. எம்.ஜி.ஆர். தேர்தலில் நிற்கும் போது தமிழகத்தில் இருந்த கருணாநிதி அரசு அடக்குமுறைகளை கையாண்டது. அதுபோல் பழனிசாமி அரசும் செய்கிறது. ஆனால் பழனிசாமி அரசு மண்ணை கவ்வப்போகிறது.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றால் பணம் தருவதாக கூறி ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்ததாக என்மீது புகார் கூறுகிறார்கள். இப்படி கொடுத்தால் மக்கள் வாக்களிப்பார்களா?. மக்கள் என்ன காதில் பூ சுற்றிக்கொண்டு இருக்கிறார்களா?.

பணம் தருவதாக கடன் சொல்லி மக்கள் ஓட்டு போடுவார்கள் என்றால், என் மீது மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளார்கள் என்று ஏற்றுக்கொள்கிறீர்களா.

கடந்த முறை நடந்த தேர்தலின் போது தி.மு.க., ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என்று பேசினார்கள். ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தொகுதிக்கு யார் நல்லது செய்வார்கள்? என முடிவு செய்யக்கூடியவர்கள்.

பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியம் ஜெயலலிதா வழியில் வந்த எனக்கு கிடையாது. இது போல் புரளிகளை கிளப்பி விடுகின்றனர். நாளை காலையிலேயே ஆர்.கே.நகர் தொகுதியின் முடிவு தெரிந்துவிடும். மக்கள் எங்களுக்கு நல்லதொரு முடிவை தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று மதியம் மதுரை சென்ற டி.டி.வி.தினகரனிடம் நிருபர்கள், “ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை உங்களிடம் கொடுத்தது விவேக் என கிருஷ்ணபிரியா கூறியுள்ளாரே?” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தினகரன், “கிருஷ்ணபிரியா வயது முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார்” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:-

“ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை ஆணையம் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதனை நாங்கள் சட்டப்படி சந்திப்போம். நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்வேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்பு தினகரன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நேரத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.

அப்போது அங்கு திரண்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தினகரனுக்கு எதிராகவும், தினகரன் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்.சுக்கு எதிராகவும் கூச்சலிட்டனர். இதனால் சுமார் 15 நிமிடம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com