மோசடி வழக்கில் கைதான வின்ஸ்டார் இந்தியா நிறுவன அதிபர் ஜெயிலில் அடைப்பு

மோசடி வழக்கில் கைதான வின்ஸ்டார் இந்தியா நிறுவன அதிபர் சிவக்குமார் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மோசடி வழக்கில் கைதான வின்ஸ்டார் இந்தியா நிறுவன அதிபர் ஜெயிலில் அடைப்பு
Published on

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே 5 தியேட்டர் எதிரே வின்ஸ்டார் இந்தியா என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தவர் சிவக்குமார் (வயது 48). இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் மட்டுமல்ல ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை சாமான்கள் மற்றும் நெல்லிச்சாறு போன்றவற்றையும் விற்பனை செய்து வந்தார்.

தனது தொழில்களில் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இதை நம்பி பலர் லட்சக்கணக்கில் இவரிடம் முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு அடைந்த நிலையில் இவர் பணத்தை திருப்பித்தரவில்லை.

இவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.49 லட்சம் கொடுத்து ஏமாந்த சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகரை சேர்ந்த பஸ் அதிபர் ருத்ராசாமி (வயது 73), சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதே போல நெல்லிச்சாறு கொடுத்து அதற்கு வரவேண்டிய 1 கோடியே 78 லட்சம் பணத்தை திருப்பித்தரவில்லை என்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச்சேர்ந்த பிரபாகரனும் புகார் செய்தார்.

சேலம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமி‌ஷனர் வேலன், இன்ஸ்பெக்டர் மரியமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் மோசடி(420), பரிசு சீட்டு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.

நேற்று இரவு அவர் சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சிவா முன்பு ஆஜர் செய்யப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிவக்குமார் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிவக்குமார் மீது இன்றும் பல புகார்கள் குவிந்தன. இதுவரை 55-க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்து உள்ளனர். அவரிடம் பணம் கட்டி ஏமாந்தவர்கள் சேலம் மத்தியகுற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com