

வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் பெரிய ஏழாச்சேரி பெருமாள் கோவில் தெரு பள்ளக் காலனியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 32). காஞ்சீபுரத்தில் உள்ள ரைஸ்மில்லில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பார்வதி.
பார்வதியிடம் அவருடைய தம்பிகள் ராமச்சந்திரன், பிரபு ஆகிய 2 பேரும், ரூ.1 லட்சம் பணம் கேட்டனர். பார்வதி வங்கி கணக்கில் இருக்கும் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்து தம்பிகளிடம் கொடுக்குமாறு கணவர் இளங்கோவனிடம் கூறினார். இளங்கோவன் பணம் தரமறுத்தார்.
இதனால் தம்பதியிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பார்வதியின் தம்பிகள் 2 பேரும், இளங்கோவனை தீர்த்துகட்ட முடிவு செய்தனர். இதற்கு, பார்வதி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்றிரவு, மைத்துனர்கள் இளங்கோவனை நைசாக பேசி வெளியே அழைத்துச் சென்றனர். பாவூர் வாராபதி என்ற இடத்திற்கு அழைத்து சென்று, நண்பர் சுகுமாறன் என்பவரோடு சேர்ந்து இளங்கோவனை சரமாரியாக தாக்கினர்.
அப்போது, அந்த வழியாக இளங்கோவனின் உறவினர் கோதண்டராமன் என்பவர் எதிர்பாராதவிதமாக வந்தார். அவரை பார்த்ததும், இளங்கோவனை தாக்கிய மைத்துனர்கள் உள்பட 3 பேரும் தப்பிவிட்டனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை மீட்டு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து, உயிரிழந்த இளங்கோவனின் அண்ணன் சேகர், தூசி போலீசில் புகார் அளித்தார். போலீசார், தலைமறைவாக உள்ள இளங்கோவனின் மனைவி, மைத்துனர்கள் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.