

நாகர்கோவில்:
தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த இத்திட்டம் அவரது பிறந்த நாளான 24-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.. இதையடுத்து மானிய விலை ஸ்கூட்டர் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களில் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் வினியோகிக்கப்பட்டது.
ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கும் பெண்களுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதனை பெறுவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. இது போல ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காகவும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் மொய்த்தது.
மானிய ஸ்கூட்டர் பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க நேற்று கடைசி நாள். இதனால் ஏராளமான பெண்கள் நேற்று பேரூராட்சி, ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் திரண்டனர்.
குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டோக்கன் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனால் விண்ணப்பம் பெறும் பணி இரவு வரை நீடித்தது.
இந்த நிலையில் மேற்கு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க வந்த பெண்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
அந்த பேரூராட்சியில் பணியில் இருந்த ஊழியர்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.225 தந்தால் தான் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியதாக பெண்கள் புகார் கூறினர்.
இதனால் பெண்கள் அங்கிருந்த ஊழியர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காகவே பணம் வசூலிக்கப்படுவதாக கூறினர். ஆனாலும் பெண்கள் பலர் பணம் கொடுக்க முடியாது என்று கூறி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து பெண்களிடம் பணம் பெறுவது திடீரென நிறுத்தப்பட்டு விண்ணப்பங்கள் மட்டும் பெறப்பட்டது. இந்த விவகாரம் மாவட்டம் முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து குமரி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
குமரி மாவட்டத்திற்கு 2017-18-ம் ஆண்டில் 2700 பேருக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்க அனுமதி கிடைத்துள்ளது. இதற்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. நேற்று மாலையிலும் 100-க்கும் மேற்பட்டோர் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்க காத்திருந்தனர். அவர்களுக்கு டோக்கன் கொடுத்து இரவு 8 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டோம்.
இம்மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஒன்றில் விண்ணப்பங்களை பெற அதிகாரிகள் பணம் கேட்டார்கள் என்று எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. இன்று இது பற்றி தகவல் தெரியவந்தால் உடனடியாக விசாரணை நடத்தப்படும். இதில் தவறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.