காதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய வேண்டும்- இளம்பெண் புகார்

தூத்துக்குடியில் காதலிப்பதாக கூறி கற்பழித்த வாலிபரை கைது செய்ய கோரி தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
புகார்
புகார்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவரை தாளமுத்துநகர் மேல அழகாபுரியை சேர்ந்த வினீத் (வயது 25) என்பவர் காதலிப்பதாக கூறி அவரை வலுக்கட்டாயப்படுத்தி கற்பழித்ததாகவும், அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து அவரை மிரட்டி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்த இளம்பெண் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் கடந்த 8-ந்தேதி வினீத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரை கைது செய்யவோ, அவரிடம் உள்ள வீடியோக்களை கைப்பற்றவோ போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்ற அந்த இளம்பெண் தரப்பில் கூறப்பட்டது. 

இதற்கிடையே அந்த இளம்பெண் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். நேற்றும் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

வினீத்தை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டுகிறார். போலீசார் வினீத்தை கைது செய்து 3 நாட்களில் வீடியோக்களை மீட்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 

இதற்கிடையே வினீத்தின் தந்தை இறந்து விட்டார். மேலும் வினீத் தரப்பினரின் மிரட்டலுக்கு பயந்து தற்போது நான் பெற்றோருடன் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறேன். போலீசார் வினீத்தை கைது செய்து அவரிடம் இருக்கும் வீடியோக்களை மீட்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இளம்பெண் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com