கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட மொய் விருந்து- ரூ.14 லட்சம் வசூல்

கஜா புயல் நிவாரணத்திற்காக அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட மொய் விருந்தில் பங்கேற்றவர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது. #GajaCyclone
அமெரிக்காவில் நடந்த மொய் விருந்தில் உணவு பரிமாறப்பட்ட காட்சி.
அமெரிக்காவில் நடந்த மொய் விருந்தில் உணவு பரிமாறப்பட்ட காட்சி.
Published on

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் அமெரிக்க வடக்கு கரோலினா நகரில் தமிழகத்தை சேர்ந்த வாகை மகளிர் குழுவினர் மொய் விருந்து நடத்தி இந்திய மதிப்பில் ரூ.3½ லட்சம் வசூல் செய்தனர்.

இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், அனவயல், செரியலூர் உள்ளிட்ட கிராமங்களில் சோலார் தெரு விளக்குகள் பொருத்த திட்டமிட்டுள்ளனர். இதேபோல் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க டாலஸ் நகரில் தமிழர்கள் இணைந்து மொய் விருந்து நடத்தி ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் வசூல் செய்தனர்.

இதில் 250 தமிழ் குடும்பங்கள் உள்பட இந்திய குடும்பங்களை சேர்ந்த 700 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடப்பது போல தரையில் விரிப்புகள் போட்டு, தலை வாழை இலைகள் வைத்து அறுசுவை உணவுகளை ஏற்பாட்டாளர்களே பரிமாறினர்.

இந்த மொய் விருந்தில் பங்கேற்றவர்கள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கினர். இதன் மூலம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது. இதுகுறித்து மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்த ஜெய்நடேசன், கீதா சுரேஷ், பிரவீணா வரதராஜன் ஆகியோர் கூறியதாவது:-

கஜா புயலால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி மறுநடவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொடுத்தவர்கள் மறுவாழ்வுக்கு வழி செய்யவில்லை. இதனால் தான் குறுகிய காலத்தில் கலாசார முறைப்படி உதவிகள் பெற தமிழகத்தில் மொய் விருந்து நடத்துவது போல அமெரிக்காவிலும் நடத்தினோம். முடிந்த அளவு அழைப்புகள் அனுப்பினோம்.

இதில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு தாராளமாக மொய் செய்தார்கள். இதில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் கிடைத்துள்ளது. எங்களால் ஒரு கிராமத்தை மீட்க முடியும் என்று நம்புகிறோம். அதேபோல் நல்ல சம்பளத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வந்தால் விரைவில் நம் விவசாயிகளை மீட்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். #GajaCyclone

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com