

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு டெல்லியில் இன்று பிரதமர் மோடி, ‘Fit India' எனும் இயக்கத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. இதனை ஓர் அங்கமாக்கிக் கொள்ளவேண்டும்.
அனைவரும் உடல் பலத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும்
என்பதற்காகவும் வீட்டிற்குள் முடங்கி கிடக்காமல் மாணவ, மாணவியர்கள்
இளைஞர்கள் மைதானத்தில் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்பதற்காகவும் இந்திய
உடற்தகுதி இயக்கம் உருவாக்கப்பட்டது.
வெற்றிக்கு படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள், லிப்ட் வேண்டாம். உடற்தகுதி
என்பது இந்தியாவில் ஒரு இயக்கம் மட்டுமல்ல, நமது கலாச்சாரத்தில் ஒரு
அங்கமாக எப்போதுமே உள்ளது.
மக்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது, நாட்டின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாதது. ஆரோக்கியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தவர்கள் நமது முன்னோர்கள்.
உடற்பயிற்சி என்பது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமானது அல்ல. அனைவருக்குமானது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். எனவே, நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவறாமல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இயக்கத்தின் மூலம் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தலைமையில் 28 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜீ, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.