

பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக இன்று சென்னை வந்தார். டெல்லியில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்ட அவர், காலை 9.55 மணி அளவில் சென்னை விமான நிலையத்தை அவர் வந்தடைந்தார்.
அங்கு அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி., தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, மெரினா கடற்கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி, ‘தினத்தந்தி’ பவள விழாவில் பங்கேற்றார்.
தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்ட அவர், சி.பா.ஆதித்தனார் விருதுகள் மற்றும் சாதனையாளர் விருதினை வழங்கி உரையாற்றினார். விழா முடிந்ததும், சென்னை கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன், கவர்னர் பன்வாரிலால் புரோகித், மத்திய மந்திரிகள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் கருணாநிதியிடம் நலம் விசாரித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த பிரதமர் மோடி, வெளியில் திரண்டிருந்த கட்சியினரைப் பார்த்து உற்சாகமாக கையசைத்துவிட்டு, காரில் ஐ.என்.எஸ். கடற்படை தளத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் சென்ற அவர் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
பிரதமர் மோடியின் சென்னை பயணத்தை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர், மதியம் 12.05 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்படும் பிரதமர் நரேந்திர மோடி, 12.15 மணிக்கு ஐ.என்.எஸ். அடையார் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் அவர், 12.40 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து 12.45 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி சென்னை சுற்றுப்பயணத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.