பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் - நிதி மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை

மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் - நிதி மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை
Published on

வாஷிங்டன்:

மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் ஆண்டு கூட்டங்களில் பங்கேற்பதற்காக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் நேற்று இந்திய செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெட்லி, பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தியது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை குறை கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய பொருளாதாரத்துக்கு நீண்டகால பலன்களை உருவாக்குவதை மனதில் வைத்து பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற சில முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உச்சத்தில் இருக்கும் போது இந்த சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்தது.

இந்த அமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இதுதான் சரியான நேரம் என நான் நினைக்கிறேன். இதன் மூலம் வருகிற நாட்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் உயரத்தை அடையும். இந்த பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

கருப்பு பணத்தை முடிவுக்கு கொண்டு வருவதும், அதை ஒழிப்பதும் காங்கிரசுக்கு ஒருபோதும் முன்னுரிமையாக இருந்தது இல்லை. எனவே பணமதிப்பு நீக்கம் தொடர்பான அவர்களின் கவலை இயற்கையானது. ஆனால் ஜி.எஸ்.டி. என்பது காங்கிரசின் திட்டம். ஆனால் தொடர்ந்து சந்தர்ப்பவாத கட்சியாக அது இருப்பதால், தற்போது இதை எதிர்க்கிறது.

இந்த நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் குறைகூறியபோதும், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி தலைவர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது. அவர்கள் இந்தியாவின் தற்போதைய பொருளாதார மந்த நிலையை ஒரு பிறழ்ச்சி என்று கூறியிருப்பதுடன், இது ஒரு குறுகிய கால விளைவு என்றும் கூறியுள்ளனர்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற அமைப்பு சீர்திருத்தம் மேற்கொண்ட இந்தியாவின் துணிச்சலுக்கு உலகளாவிய பாராட்டு கிடைத்துள்ளது. இப்படி இந்தியாவின் பொருளாதாரம் குறித்து உலக தலைவர்களிடம் இருந்து நேர்மறையான விளைவுகள் மற்றும் கருத்துகள் பெறுவதன் மூலம் இந்தியாவின் நம்பிக்கை அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

முன்னதாக ஈரான் நாட்டு நிதி மந்திரி மசூத் கர்பாசியனை, அருண் ஜெட்லி சந்தித்து பேசினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஈரானுடன் பல்வேறு விவகாரங்கள் குறிப்பாக எண்ணெய் கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் கிடப்பில் இருந்தன. இதில் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன’ என்றார்.

அமெரிக்கா தனது விசா கொள்கை குறித்து இறுதி முடிவு எடுக்குமுன், இந்திய ஐ.டி. ஊழியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா குறித்தும் தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என்றும் ஜெட்லி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com