

மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது.
முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் ஐசாலில் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் சோரம்தங்கா, சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கவும் முடிவு செய்யப்பட்டது.